வாலி வழிபட்ட தலமாதலால் 'குரங்காடுதுறை' என்றும், காவிரியின் வடகரையில் உள்ளதால் 'வடகுரங்காடுதுறை' என்றும் பெயர் பெற்றது. தென்குரங்காடுதுறை சுக்ரீவன் வழிபட்ட மாயவரம் அருகில் உள்ள ஆடுதுறை தலம். கர்ப்பிணிப் பெண் ஒருத்தி இந்த தலம் வழியாக வரும்போது தாகத்தால் வருந்த, சிவபெருமான் தென்னங்குலையை வளைத்துக் கொடுத்தார். அதனால் பெருமானுக்கு 'குலை வணங்கீஸ்வரர்' என்ற திருநாமம் ஏற்பட்டதாக தலவரலாறு கூறுகிறது.
இத்தலத்து மூலவர் 'அழகுசடைமுடிநாதர்', 'தயாநிதீஸ்வரர்' என்னும் திருநாமங்களுடன் லிங்க வடிவில் காட்சி தருகின்றார்.
அம்பிகை 'அழகுசடை முடியம்மை' என்ற திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
அனுமன் வழிபட்ட தலம். சிட்டுக்குருவி இத்தலத்து மூலவரை பூஜை செய்ததால் சுவாமிக்கு 'சிட்டுலிங்கம்' என்ற பெயரும் உண்டு.
இங்குள்ள நடராஜர் மற்றும் சிவகாமியம்மையின் திருவுருங்கள் கற்சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளன.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழால் போற்றிப் வணங்கியுள்ளார்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|